Sunday, January 11, 2009

அது நெருக்கடி நிலைக் காலம். எமர்ஜென்சி என்று சொல்லப்பட்ட நெருக்கடி நிலையை மத்திய அரசு பிறப்பித்து, அது அமலில் இருந்த 1976ஆம் ஆண்டு. எனது சொந்த வாழ்விலும் மிக மிக நெருக்கடியான காலம் அது. ஒரு நாள் மாலை நேரம். மதுரையில் ஒரு தெருவில் நானும், அம்பத்தூர் தோழர் மூர்த்தியும் பேசிக்கொண்டே நடந்து கொண்டு இருந்தோம்.காலையில் இருந்தே சாப்பிடவில்லை. சாப்பிட வழியில்லை! ஒரு நண்பரிடம் இரண்டு ரூபாய் பெற்றுக் கொண்டு, மலிவு விலை உணவு விடுதியை நோக்கிச் சென்று கொண்டு இருந்தோம்.

தெருமுனையில் தரையில் பழைய புத்தகங்கள் விற்பனைக்காகப் பரப்பி வைக்கப்பட்டு இருந்தன. அதை நான் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே நடந்து, கடந்துவிட்டேன். திடீரென்று மூளையில் மின்னலடித்தது! நீண்ட காலமாக நான் தேடி வந்த ஏதோ ஒரு புத்தகம் அங்கே இருப்பதைப் போன்ற உணர்வு! திரும்பி வந்து பார்வையால் துழாவினேன்! ஆ! கிடைத்துவிட்டது! தோழர் இ.எம்.எஸ். எழுதிய ‘மகாத்மாவும் அவரது கொள்கையும்’ என்ற அருமையான திறனாய்வுப் புத்தகம்தான் அது! 1959ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பதிப்பு!

கடைக்காரரிடம் விலை விசாரித்தேன். நீண்ட பேரத்துக்குப் பிறகு “ரெண்டு ரூபாய்க்குக் குறையாது” என்று கறாராகச் சொல்லிவிட்டார்! மூர்த்தியைப் பரிதாபமாகப் பார்த்தேன்! அவர் “பரவாயில்ல தோழர், வாங்கிக்குங்க. சமாளிக்கலாம்” என்று ஆறுதலாகச் சொன்னார்! உடனே புத்தகத்தை வாங்கிவிட்டேன்! அன்று முழுவதும் இருவரும் பட்டினி! இதுபோல, புத்தகம் தொடர்பாக வகை வகையான பல சம்பவங்கள் எனது வாழ்வில் உண்டு! அந்த அளவுக்குப் புத்தகங்கள் மீது எனக்குத் தீவிரக் காதல்! தீராக் காதல்!

நான் படித்த ஆயிரக்கணக்கான புத்தகங்களில் (என்ன ஒரு தன்னடக்கம் பாருங்கள்!) என்னை மிக மிகக் கவர்ந்த புத்தகங்கள் ஒரு நூறாவது இருக்கும்.அவற்றில் எனது சிந்தனையிலும் வாழ்க்கையிலும் ஒப்பீட்டளவில் அதிக விளைவை ஏற்படுத்தியுள்ள புத்தகங்கள் என்ற முறையிலும், வகைக்கு ஒன்று என்ற முறையிலும் பத்துப் புத்தகங்களைத் தேர்வு செய்ய விரும்பி, முடியாமல், பதினொரு புத்தகங்களைத்
தேர்வு செய்து இருக்கிறேன். அவை தொடர்பாக உங்களோடு உரையாட விரும்புகிறேன்.
முதலில் -

1. ‘பொது உடைமைதான் என்ன?’

நான் சிறுவனாக இருந்தபொழுது தீவிரமான கடவுள் பக்தனாக இருந்தேன். ஆனால் குடும்பத்திலும், பள்ளியிலும் வெளியிலும் நிலவிய சூழ்நிலைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தன. எனினும் பல சமாதானங்களைச் சொல்லிக்கொண்டு இருந்தேன். இந்தச் சூழ்நிலையில்தான் நான் பத்தாம் வகுப்பிலும், பதினொன்றாம் வகுப்பிலும் படித்தபொழுது த.ச.இராசாமணி ஐயா என்ற தமிழாசிரியர் எனக்கு வாய்த்தார். அவர் ஒரு கம்யூனிஸ்ட். பாடம் நடத்துவதிலும் வல்லவர். பாடம் தொடர்பாக நாங்கள் தொடங்கிய விவாதம், அரசியல், சமூகம், பொருளாதாரம்... என்று நாளும் வளர்ந்தது.

ஒரு நாள் அவர் என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். ராகுல்ஜி என்ற ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘பொது உடைமைதான் என்ன?’ என்ற புத்தகம். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். மீண்டும் மீண்டும் படித்தேன். ஒரு சில சந்தேகங்கள். இராசாமணி ஐயாவிடம் மீண்டும் விவாதம். அவ்வளவுதான்! எனது மனதை விட்டுக் கடவுள் நம்பிக்கை மறைந்தது! கம்யூனிசம் நிறைந்தது! புதிய வாழ்க்கை தொடங்கியது! அந்த அளவுக்கு அருமையான புத்தகம் தான் ‘பொது உடைமைதான் என்ன?’

இன்றைய எனது வளர்ந்த நிலையில் இருந்து பார்க்கும்போது, இந்தப் புத்தக்கத்தில் சில குறைபாடுகள் உள்ளன என்பது தெரிகிறது. ஆனால் குறைகளே இல்லாத, எல்லாக் காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஒரு புத்தகம் என்று எதுவுமே இல்லை என்பதும், இருக்க முடியாது என்பதும் உங்களுக்குத் தெரிந்ததுதானே. எனவே ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்பொழுது இது ஒரு சிறந்த புத்தகம் என்றே இப்பொழுதும் நான் கருதுகிறேன். இனி இந்தப் புத்தகத்தைப் பற்றி:

இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் தலைசிறந்த மேதைகளில் ஒருவர் ராகுல சாங்கிருத்தியாயன் என்ற ராகுல்ஜி. இந்த மேதை, எளிய மக்களுக்காக 1935ஆம் ஆண்டில் எழுதிய எளிமையான, சிறிய புத்தகம்தான் ‘பொது உடைமைதான் என்ன?’ (‘கம்யூனிசம்’ என்ற சொல்லுக்குத் தமிழில் ‘பொது உடைமை’ என்ற சொல்லே பயன் படுத்தப்படுகிறது. ஆனால் கம்யூனிசம் என்பது ‘உடைமையை பொதுவாக ஆக்குவது’ மட்டுமல்ல, அதைவிட விரிந்த பொருள் கொண்டது. எனவே நான் தமிழிலும், கம்யூனிசம் என்ற சொல்லையே பயன்படுத்தி வருகிறேன். இதுபற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்).

இந்தப் புத்தகத்தில் எடுத்த எடுப்பிலேயே, முதல் பத்தியிலேயே, முதலாளித்துவம் என்றால் என்ன, அதன் சாராம்சம் என்ன? என்பதை அவர் அழகாகக் கூறிவிடுகிறார். அதாவது - “ஒரு மனிதன் வேறு எந்தத் தகுதியும் அற்றவனாயிருந்தும், கேவலம் தனது முதலின் பலத்தினால் பொருள்களை உற்பத்தி செய்யும் விலையுயர்ந்த சாதனங்களைப் பெற்று, அதன் மூலம் ஏராளமான மக்களுடைய உழைப்பின் பெரும் பகுதியைத் தனது சொந்த லாபத்திற்காகவும், தனக்கு உதவி செய்யும் முதலைப் பெருக்குதவற்காகவும் உபயோகித்துப் பணம் சம்பாதிப்பதற்குச் சிறந்த வழி முதலாளியக் கொள்கை” என்று அவர் அறிமுகப்படுத்துகிறார்.

இதைத் தொடர்ந்து, மனிதகுல வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லி, ஐரோப்பா கண்டத்திலும், பிறகு இந்தியாவிலும் முதலாளித்துவம் தோன்றி வளர்ந்த கதையை ஒருசில பக்கங்களில் விவரிக்கிறார். அடுத்து, பொது உடைமைக் கொள்கை (கம்யூனிசம்) தோன்றுவதற்கான தேவை, சூழ்நிலை பற்றிக் கூறுகிறார். இதன் பிறகு சரமாரியாக வந்து விழுகின்றன அவருடைய வாதங்கள்.

பொதுஉடைமைச் சமுதாயத்தில் மட்டுமே வறுமை, ஜாதி, கடவுள் - மத நம்பிக்கை, பெண் அடிமைத்தனம் ஆகியவை முற்றாக, முழுமையாக ஒழியும் என்பதையும் “மனித வாழ்க்கை மிகுந்த அமைதியும், சுகமும், மகிழ்ச்சியும் உடையதாக” இருக்கும் என்பதையும் அடுக்கடுக்கான எடுத்துக்காட்டுகளுடனும், தர்க்க ரீதியான வாதங்களுடனும் கூறி முடிக்கிறார் ராகுல்ஜி.

இப்போது இந்தப் புத்தகத்தில் இருந்து சில மேற்கோள்கள்:

விஞ்ஞான வளர்ச்சி 6 மனிதர்களின் வேலையை ஒரு மனிதன் செய்ய உதவி செய்தால் பாக்கி 5 மனிதர்களை வேலையற்றவர்களாகச் செய்து, அவர்களைப் பசியால் மாளச் செய்யக்கூடாது. வேலையின் நேரத்தை அதே 6 மனிதர்களுக்கும் பிரித்துக் கொடுத்து விட வேண்டும். 6 மனிதர்கள் 12 மணி நேரத்தில் நெய்யக்கூடிய துணியை ஒரே மனிதன் இயந்திரத்தின் உதவியால் அதே நேரத்தில் நெய்துவிடக் கூடுமானால் அந்த 12 மணி நேர வேலையை அந்த 6 மனிதருக்கும் தலைக்கு 2 மணி நேரவிகிதம் பிரித்து கொடுத்து விட வேண்டும். இதுதான் பொதுவுடைமைக் கொள்கை, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கு நம் முன்னால் பிரேரேபிக்கும் சிறந்த வழி.

ஜாதிய வேற்றுமை உணர்ச்சியை உறுதிப்படுத்த விரும்புகிறவர்கள், அதை உபயோகித்துப் பொருளாதார லாபம் பெற விரும்பும் சுயநலவாதிகளென்பது நன்கு தெரியும். ஒரு முறை அவர்களுடைய பொருளாதாரச் சுயநலத்தைத் தடுத்து விடுங்கள், பின்பு இந்தப் பெரிய ஜாதீய மாளிகை வீழ்ச்சியடைய நேரஞ்செல்லாது. கடவுள் என்பதுதான் என்ன? மனிதஜாதியின் குழந்தைப் பருவத்தினுடைய பயம் நிறைந்த இதயத்தால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு உருவத்தின் மலர்ச்சி. மனிதர்கள் காட்டுமிராண்டி நிலையிலிருந்த காலத்தில், அதாவது அவர்களுடைய அறிவு வளர்ச்சி தற்கால ஐந்து வயதுக் குழந்தையினுடையதைப் போன்றிருந்த காலத்தில், அவர்கள் இருட்டு, தெரியாத இடம், அறிமுகமில்லாத பொருள் இவைகளைக் கண்டு பயமடைந்தார்கள்.

மின்னல், நெருப்பு போன்ற சக்தி வாய்ந்த பொருள்கள் அவர்களுக்கு மிகுந்த பயத்திற்குக் காரணமாயிருந்தன. அதிலிருந்து அவர்கள் தேவதைகளைக் கற்பனை செய்யத் துவங்கினார்கள். மெது மெதுவாக இறந்து போன வீரர்களும், பலசாலிகளும் இந்தத் தேவ கூட்டத்தில் இடம் பெற்றார்கள். ஒவ்வொரு ஜாதியிலும் இவ்விதம் அனேகத் தேவதைகளிருந்தன. அவைகளின் சக்தி, மேன்மை, பெருமை இவைகளுக்காக மனித ஜாதிகளுள் போட்டி இருந்து கொண்டேயிருந்தது. தங்கள் ஜாதித் தேவதைகளுக்குள்ளும் கூடச் சிறிது பெரிது என்ற தகராறு இருந்தது. பின்னால் “யார் பெரியவர், யார் பெரியவர்” என்று தேடியதன் பலனாய், ‘உலகத்தைத் தோற்றுவித்த’ ஒரே கடவுள் சிருஷ்டிக்கப்பட்டார்.

மனிதர்களின் மனோ வளர்ச்சியோடு கூடவே அவரிடத்திலும் அனேக நல்ல குணங்கள் சேர்க்கப்பட்டன. இவ்விதம்தான் கடவுளின் உற்பத்தி ஏற்பட்டது. உண்மையில் கடவுள் மனிதனுடைய மானசீக புத்திரன். கடவுளில்லா விட்டால் இந்த உலகத்தை யார் படைத்தார்களென்று நீங்கள் கேட்கலாம். ஒவ்வொரு பொருளுக்கும் படைப்பவர்கள் அவசியமா? அப்படி அவசியமானால் கடவுளைப் படைத்தவர்கள் யார்? அவர் தானே தோன்றினாரென்றால், இதே விஷயத்தை இயற்கை பற்றியும் ஏன் ஒப்புக் கொள்ளக் கூடாது?

பெண்களின் உண்மையான சுதந்திரம் பொது உடைமைக் கொள்கையில்தான் கிடைக்க முடியும். ஏனெனில் அதுதான் எல்லாச் சுதந்திரங்களுக்கும் பிறப்பிடமான, பொருளாதார சுதந்திரத்தைத் தோற்றுவிக்கிறது. அது சுதந்திரத்தின் விரோதியான மதம், கடவுள், சமூகம் எதையும் பொருட்படுத்துவ தில்லை. அது திருமணத்தைப் பெண்களின் வாழ்க்கைக்குரிய தொழிலாகச் செய்வதில்லை. அது பெண்கள் ஆண்களை விடக் குறைவான தகுதியுடையவர்களல்ல என்று கருதுகிறது. “உண்மையான இல்லாள்”, “உண்மையான தாய்”, “பெண்ணின் புனிதமான கடமை”, “கற்புக் கொள்கை”, என்பன போன்ற பெண்களுக்குக் கொடுமை செய்யும் சொற்களின் சுழலிலே அது அகப்பட்டுக் கொள்வதில்லை.

இதுவரை நாம் ராகுல்ஜியின் புத்தகத்தைப் பற்றிப் பார்த்தோம். அடுத்து நாம் பார்க்கப் போவது, உலகிலேயே, கடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த சிந்தனையாளரின் புத்தகத்தைப் பற்றி.
(தொடரும்)


 நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

No comments: