Sunday, January 11, 2009

என்னைக் கவர்ந்த புத்தகங்கள் 2 மூல ஆதாரமான மூலதனம்

இப்போதெல்லாம் ஆங்கில நாளிதழ் எதை எடுத்தாலும் ‘‘மார்க்ஸ், மார்க்ஸ்’’ என்று கூறுவதைப் பார்க்க முடிகிறது. கடந்த பத்து நாள்களில் மட்டும் (அக்டோபர். 2008) ‘இந்து’, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ மற்றும் பல நாளிதழ்களில் நான்கு முறை மார்க்ஸ் பற்றிய செய்திகளும், கட்டுரைகளும வெளியாகி உள்ளன.

‘‘மீண்டும் மார்க்ஸ் வந்து விட்டார்’’. ‘‘நெருக்கடி காலத்தில் மறுபடியும் மார்க்ஸ்’’ என்றெல்லாம் தலைப்புகள் பளிச்சிடுகின்றன.

‘‘மார்க்சின் ‘மூலதனம்’ புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும்’’ என்று போப் சொல்கிறார். பிரான்சு நாட்டு ஜனாதிபதி சொல்கிறார். ஜெர்மனி நாட்டு நிதியமைச்சர் சொல்கிறார்.

சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் தொடங்கிய கடுமையான பொருளாதார நெருக்கடி, இந்தியா உட்பட, உலகம் முழுவதும் பரவி வருகிறது. இது ‘‘மார்க்ஸ் சொன்னது சரிதான்’’ என்று அனைவரையும் சொல்ல வைத்திருக்கிறது.

ஆனால் நமது அருந்தமிழ் நாட்டின் பெருந்தலைவர்கள், தலைவிகள் யாரும், கம்யூனிஸ்டுகளைத் தவிர, இந்த நெருக்கடி குறித்தோ, காரணம் குறித்தோ, தீர்வு குறித்தோ வாய்திறப்பதே இல்லை.

இப்போது நாம் மூலதனம் புத்தகம் பற்றிப் பார்க்கலாம்.

எனக்குக் காரல் மார்க்சின் புத்தகங்கள் அறிமுகமானது எனது பதின் பருவத்தில். எனது பதினேழு வயதில் தோழர் ஐ.மா.பாவைக் கேள்விகளால் அரித்து கொண்டிருந்தேன்.

ஐ.மா.பா. என்ற ஐ.மாயாண்டி பாரதி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர். அப்போது எங்களைப் போன்ற ‘சுள்ளான்’களையும் மதித்து விவாதிக்கக் கூடியவர்.

ஒருநாள் அவரைக் கேட்டேன்.

‘‘ஒரு முதலாளி முதல் போட்டு தொழிற்சாலைய நடத்துறான். முதல் போட்டவன் லாபம் சம்பாதிக்கிறதுல என்ன தப்பு?’’

அப்போது எங்களுடன் ஒரு ஆலைத் தொழிலாளியும் இருந்தார். அவரும் இளைஞர் தான். அவரைப் பார்த்து ஐ.மா.பா. ‘‘இவன் என்னமோ கேக்குறாண்டா, நீயே பதில் சொல்லு’’ என்றார்.

உடனே அந்தத் தொழிலாளி ‘‘போட்ட முதலத்தான் கொஞ்ச நாள்ல முதலாளி திருப்பி எடுத்துடுறான்ல. அதுக்கப்புறமும் லாபத்த எடுக்குறது எப்பிடிச் சரியாகும்?’’ என்றார்.

எனக்கு ‘திக்’ கென்றது.

dass இந்த விஷயம் எனக்கு ஏன் பிடிபடாமல் போனது என்று வெட்கமாக இருந்தது. இருந்தாலும் மீண்டும் கேள்வி கேட்டேன்.

‘‘அதுக்கப்புறமும் முதலாளி தொடர்ந்து நிர்வாகம் பண்றான்ல?

உடனே பதில் வந்தது.

‘‘அதுக்கு ஒரு சம்பளம் எடுத்துக்க. லாபத்தப் பூராவும் எடுத்துக்காத’’

பிறகு ஐ.மா.பா. நீண்ட விளக்கம் தந்தார். சில எளிய புத்தகங்களைப் படிக்கச் சொன்னார்.

படித்தேன். கொஞ்ச நாளில் மார்க்சின் புத்தகங்களையும் ஒவ்வொன்றாகப் படிக்கத் தொடங்கினேன்.

எனினும், மார்க்சின் தலைசிறந்த புத்தகமான ‘மூலதனம்’ புத்தகத்தைப் படிக்கப் பயமாக இருந்தது.

மூன்று காரணங்கள். ஒன்று : அப்போது அது தமிழில் இல்லை. ஆங்கிலத்தில் தான் இருந்தது. எனக்கோ அப்போது ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. இரண்டு : அந்தப் புத்தகத்தின் பெரிய்ய்.......ய அளவு. அதனுடைய நான்கு தொகுதிகளும் சேர்ந்து மொத்தம் 3,685 பக்கங்கள். மூன்று : அதன் விஷய கனம்.

எனவே பல ஆண்டுகளுக்குப் பிறகே அந்த ஆங்கிலப் பதிப்பைப் படித்து முடித்தேன்.

பிரம்மாண்டம்! உண்மையிலேயே பிரமித்துப் போனேன்!

உலகையே பிரமிக்க வைத்த, புதுமையான, புரட்சிகரமான, பொருளாதாரப் புத்தகம் என்பது முதல் காரணம். ஆனால் அது மட்டுமல்ல.

மார்க்சின் இலக்கிய நடை, கிண்டல், கேலி, தொழிலாளர் நிலை கண்டு குமுறும் கோப ஆவேசம், ‘‘இது, இது என்னுடைய கண்டுபிடிப்பு. இது என்னுடைய கண்டுபிடிப்பு அல்ல. பெயர் தெரியாத ஒரு பொருளாதாரவாதியின் கண்டுபிடிப்பு’’ என்று சொல்லும் நேர்மை, நமது சென்னை வரை நீண்டு வரும் அவரது ஆய்வின் வீச்சு...

யார் இந்த மார்க்ஸ்?

கம்யூனிசத்தின் தந்தை

மார்க்சுக்கு முன்பே கம்யூனிசம் என்ற சொல்லும், கருத்தும் இருந்து வந்தன. ஆனால் அறிவியல் அடிப்படையில் அமைந்த, புரட்சிகரவழிகாட்டக்கூடிய, நடைமுறைச் சாத்தியமான கம்யூனிசக் கருத்தியலுக்கு அவர்தான் தந்தை.

அதுமட்டுமல்ல.

தத்துவஞானி, பொருளாதார மேதை, அரசியல் அறிஞர், சமூகவியல் வல்லுநர், வரலாற்று ஆசிரியர், அறிவியல் ஆய்வாளர், இலக்கிய விமர்சகர், பத்திரிகையாளர், அமைப்பாளர்.... அனைத்துக்கும் மேலாக,

மகத்தானபுரட்சிக்காரர்!

கடந்த ஆயிரம் ஆண்டுகளில் உலகிலேயே தலைசிறந்த சிந்தனையாளர் என்று பி.பி.சி. நிறுவனக் கருத்துக் கணிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஜெர்மனியில் பிறந்து, உலக மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்து, வறுமைவாட்டிய போராட்ட வாழ்க்கையின் கொடூரமான துன்பங்கள் அனைத்தையும் ஏற்று...

ம்ம்ம்.... அவரது வாழ்க்கை வரலாற்றை நீங்கள் படித்து விடுங்கள். அவரும், அவரது மனைவி ஜென்னியும், குழந்தைகளும், உயிர்த்தோழர் எங்கெல்சும் வாழ்ந்த அன்பு வாழ்க்கையை, தியாக வாழ்க்கையை, போராட்ட வாழ்க்கையை நீங்கள் படித்தால் உங்கள் உடல் சிலிர்க்கும்! உள்ளம் உருகும்!

இப்போது நாம் மூலதனம் புத்தகம் பற்றிப் பார்க்கலாம்.

‘மூலதனம்’ புத்தகத்தைச் சிலர் ‘டாஸ் கேப்பிட்டல்’ என்று சொல்வதை நீங்கள் கேட்டு இருக்கலாம். அது ஜெர்மன் மொழிச் சொல். மார்க்ஸ் இந்தப் புத்தகத்தை ஜெர்மன் மொழியில் தான் எழுதினார்.

‘Das Kapital’ என்ற ஜெர்மன் தலைப்பை ஆங்கிலத்தில் ‘The Capital’ என்று மொழி பெயர்க்கலாம். எனினும் ஆங்கிலத்தில் ‘சிணீஜீவீtணீறீ’ என்றே மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. தமிழில் ‘மூலதனம்’ அல்லது ‘முதல்’.

இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்ன என்பதை அதன் முன்னுரையில் மார்க்ஸ் குறிப்பிடுகிறார் ‘‘நவீன சமுதாய இயக்கத்தின் பொருளாதார விதியை வெளிப்படுத்துவதே இந்தப் புத்தகத்தின் உச்ச நோக்கம்’’ என்கிறார்.



எனினும் மனித சமுதாய வரலாறு முழுவதையுமே ஆய்வு செய்கிறார். வரலாறு என்பது, முன்காலத்து கம்யூனிசச் சமுதாயம் நீங்கலாக, வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. இதன் மூல ஆதாரம் சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்பில் உள்ளது. எனவே இன்றைய சமுதாயத்தை மாற்றியமைக்க, அதன் பொருளாதாரத்தை ஆழமாக ஆய்வு செய்கிறார் மார்க்ஸ்.

முதலாளித்துவச் சமுதாயத்தில் செல்வம் என்பது, சரக்குகளின் அல்லது பண்டங்களின் (commodity) திரட்சியாக, மொத்தமாக உள்ளது. எனவே மார்க்ஸ் தனது ஆய்வை, சரக்கு என்றால் என்ன என்பதிலிருந்து தொடங்குகிறார்.

சரக்கு என்றால் என்ன?

(இன்னும் படிக்கலாம்)

No comments: