கார்ல் மார்க்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Western Philosophy 19ஆம் நூற்றாண்டு மெய்யியல் | |
![]() கார்ல் மார்க்ஸ் | |
முழுப் பெயர் | கார்ல் என்ரிச் மார்க்ஸ் |
---|---|
பிறப்பு | மே 5, 1818 Trier, பிரசியா |
இறப்பு | மார்ச் 14 1883 (அகவை 64) இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
சிந்தனை மரபு(கள்) | மாக்சிசம் |
முக்கிய ஆர்வங்கள் | அரசியல், பொருளியல், வர்க்க முரண்பாடு |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | Co-founder of மாக்சிசம் (with Engels), alienation and exploitation of the worker, The Communist Manifesto, Das Kapital, Materialist conception of history |
கார்ல் மார்க்ஸ் (கார்ல் ஹென்ரிச் மார்க்ஸ், Karl Heinrich Marx, மே 5, 1818, ஜேர்மனி – மார்ச் 14, 1883, லண்டன்) ஜேர்மனிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார்.
மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் நிபுணராகவும், தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகவும் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார்.
பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளாரெனினும் இவரது ஆய்வுகளினதும், கருத்துக்களினதும் அடிப்படை, வர்க்க முரண்பாடுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வுசெய்தல் என்பதாகும்.
கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதமொன்றிலிருந்து பெறப்பட்ட பின்வரும் பகுதி அன்னாரின் ஆய்வுகள், கண்டுபிடிப்புகளின் சாராம்சத்தை தருகிறது.
நவீன சமூகத்தில் வர்க்கங்களின் இருப்பையோ அவற்றுகிடையான முரண்பாட்டினையோ கண்டறிந்ததற்கான பெருமை எனக்குரியதல்ல. எனக்கு நீண்டகாலத்துக்கு முன்னரே வர்க்க முரண்பாட்டின் வரலாற்று வளர்ச்சியை பூர்ஷ்வா வரலாற்றறிஞர்களும், வர்க்கங்களின் பொருளியல் சட்டகத்தைப்பற்றி பூர்ஷ்வா பொருளியலாளர்க்ளும் விபரித்துவிட்டார்கள். நான் புதிதாக செய்ததெல்லாம், பின்வருவனவற்றை நிறுவியதுதான்
1. உற்பத்தி வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்று காலகட்டங்களில் மட்டுமே வர்க்கங்களின் இருப்பு கட்டுண்டிருக்கிறது.
2. வர்க்க முரண்பாடானது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்கு இட்டுச்செல்லும்.
3. இந்த பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமானது வர்க்கங்களினதும் வர்க்க சமுதாயத்தினதும் அழிவிற்கான இடைமாறு நிலையை மட்டுமே அமைத்துக்கொடுக்கும்.
- மார்ச் 5, 1852 Weydemeyer க்கு எழுதப்பட்ட கடிதம்
கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்ஸ் கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆவார்.
பொருளடக்கம்[மறை] |
[தொகு] வாழ்க்கைக்குறிப்பு
கார்ல் மார்க்ஸ், தற்போது ஜேர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே 5ம் திகதி பிறந்தார். அவர் 1824 இல் கிறிஸ்துவராக மதம் மாறிய ஒருயூதரான ஹைன்றிஷ் மார்க்ஸ் எனும் வசதி படைத்த வழக்கறிஞர் ஒருவரின் மூன்றாவது மகனாவார்.
பொன், பேர்லின் பல்கலைக்கழகங்களில் சட்டம், வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்றார். யெனா பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி பட்டத்தினை பெற்றார்.
1841 இல் பட்டம் பெற்ற மார்க்ஸ் சிலகாலம் பத்திரிகைத்துறையில் இருந்தார். சிறிது காலத்திலேயே ஜனவரி 1, 1843இல் தடைக்குள்ளான றைனிஷ் ஸைற்றுங் எனும் எதிர்க்கட்சி செய்தி ஏட்டின் ஆசிரியராக இருந்தார்.
இக்காலப்பகுதியில் லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான் 21 வயதுடைய ஜெனியுடன் மார்க்ஸுக்கு காதலுறவு ஏற்பட்டது. இதன்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக்குடும்பத்தைச்சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக 8 ஆண்டுகள் தமது காதலை இரகசியமாக வைத்திருந்து ஜெனிக்கு 29 வயதாயிருந்தபோது அவரை மார்க்ஸ் திருமணம் செய்துகொண்டார்.
பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய நாடுகளிடையே ஒவ்வொன்றினதும் புரட்சிகர இயக்கங்களில் பங்குபற்றி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நாடுகடத்தப்பட்ட மார்க்ஸ், 1843இற்கும் 1849 இற்கும் இடையே புலம் பெயர்ந்த வாழ்க்கையினை வாழ்ந்தார்.
1849 ஓகஸ்ட் 24 இல் பிரான்சில் உள்ள பிறிற்றனியில் சதுப்பானதும் உடல் நலத்துக்கு ஒவ்வாததுமான இடமொன்றுக்கு நாடுகடத்துமாறான பிரேஞ்சு அரசாங்கத்தின் ஆணைக்கு பணிய மறுத்து லண்டனுக்கு சென்று குடியேறி 35 ஆண்டுகளான தனது சீவியகாலத்தின் மிகுதியை அங்கேயே வாழ்ந்தார். அக்காலத்தில் இங்கிலாந்து ஐரோப்பாவிலிருந்து வெளியேறிய அரசியல் அகதிகட்குரிய புகலிடமாக இருந்தது. அக்காலகட்டத்தில் பெருமெடுப்பில் கட்டப்பட்ட பிரமாண்டமான பிரித்தானிய மியூசியத்தின் நிர்மாண வேலைகள் நிறைவுற்றிருந்தது. மார்க்ஸ் நாள் தவறாது அங்கு சென்று ஒவ்வொரு வேலை நாளிலும் 12 மணி நேரத்தை அங்கு செலவிட்டு வந்தார். அங்கேதான் மூலதனம் எனும் நூல் தோற்றம் பெற்றது.
மார்க்ஸ், ஏங்கல்சை 1844 ஓகஸ்ட் 28க்கும் செப்டெம்பர் 6க்கும் இடையே பாரிசில் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவரும் தம்மிடையே நட்புறவு கொள்ள ஆரம்பித்தனர்.
மார்க்சின் பெற்றோர் இறந்த சமயம் அவருக்கு மரபுரிமையாக சிறிது பணம் கிடைத்தது. 1845 இல் மார்க்சால் தோற்றுவிக்கப்பட்ட முதலாவது கம்யூனிஸ்ட் கழகத்தின் பதிநான்கு உறுப்பினர்களுள் ஒருவரான வில்ஹெம் வோல்ஃப் இடமிருந்து ஆறு நூறு பவுண் அளவில் விருப்புரிமைக்கொடையை மரபுரிமையாக பெற்றார்.
1850களின் முதல் பாதியில் நாடுகடந்து லண்டனில் வாழ்ந்த காலத்தில் மார்க்ஸ் தீவிரமான வறுமைக்குள்ளானார். அக்காலத்தில் கடன் கொடுத்தவர்களுக்குப் பயந்துகொண்டே வாழும் நிலை ஏற்பட்டது. தன்னுடைய ஆடைகள் எல்லாம் அடைமானத்தில் இருந்ததால் அவர் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாமல் போன ஒரு காலமும் இருந்தது. ஒருமுறை தனது வீட்டைவிட்டு விரட்டப்பட்டார். தன் தந்தையின் இறப்புக்கு பின் ஏங்கல்ஸ் தனது குடும்ப வணிகத்தில் கிடைத்த வருமானத்தில் மார்க்சுக்கு 350 பவுண் ஓய்வூதியத்துக்கு ஏற்பாடு செய்தார். இதுவே மார்க்சினது முக்கியமான வருமானமாக இருந்தது. நியூயோர்க் டெய்லி டிரிபியூன் என்னும் முற்போக்கு பத்திரிகைக்கு ஆக்கங்கள் எழுதிவந்தபோதும் மார்க்சுக்கு உறுதியான வருமானம் என்று எதுவும் இருக்கவில்லை. அவர் அவ்வேட்டின் ஐரோப்பிய அரசியல் நிருபராக இருந்தார். ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பவுண் பணம் வழங்கப்பட்டது . ஆயினும் அவர் எழுதிய கட்டுரைகள் முழுவதும் பிரசுரமாகவில்லை. 1862 வரை டிரிபியூனுக்கு எழுதி வந்தார். ஜெனியின் உறவினர் ஒருவர் இறந்தபோதும், ஜெனியின் தாய் இறந்தபோதும் ஜெனிக்கு மரபுரிமையாக ஓரளவு பணம் கிடைத்தது. இதனால் அவர்கள் இலண்டனின் புறநகர்ப் பகுதியான கெண்டிஷ் நகரில் இன்னொரு வீட்டுக்குக் குடிபெயரக்கூடியதாக இருந்தது. வருமானம் குறைவாக இருந்ததனால் மார்க்ஸ் பொதுவாக அடிப்படை வசதிகளுடனேயே வாழ்ந்துவந்தார். எனினும், தனது மனைவியினதும் பிள்ளைகளினதும் சமூகத் தகுதி காரணமாக ஓரளவு பூர்ஷ்வா ஆடம்பரங்களுக்கும் செலவு செய்ய வேண்டியிருந்தது.
மார்க்க்சுக்கும் ஜெனிக்கும் ஏழு பிள்ளைகள் பிறந்தனர். எனினும் மூன்று பிள்ளைகள் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டன. மார்க்சுக்கும் ஜெனிக்கும் பிறந்த பிள்ளைகள், ஜெனி கரோலின் (1844–1883), ஜெனி லோரா (1845–1911), எட்கார் (1847–1855), ஹென்றி எட்வார்ட் கை (1849–1850), ஜெனி ஈவ்லின் பிரான்சிஸ் (1851–1852), ஜெனி ஜூலியா எலீனர் (1855–1898) என்போராவர். இவர்கள் தவிர ஒரு குழந்தை 1857 ஜூலையில் பெயரிடு முன்னரே இறந்துவிட்டது.
1881 ஆம் ஆண்டு டிசம்பரில் மார்க்சின் மனைவி ஜெனி காலமானார். இதன்பின் மார்க்ஸ் 15 மாதங்கள் மூக்கடைப்பு நோயினால் அவதியுற்றார். இறுதியில் இது மூச்சுக்குழாய் அழற்சி (bronchitis), நுரையீரலுறை அழற்சி (pleurisy) போன்ற நோய்களாகி அவரது உயிரைப் பறித்தது. 1883 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி மார்க்ஸ் இலண்டனில் காலமானார். இறக்கும்போது நாடற்றவராக இருந்த மார்க்ஸ் இலண்டனிலுள்ள ஹைகேட் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது கல்லறையில், பொதுவுடமை அறிக்கையின் இறுதி வரியான "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்" (Workers of All Land Unite)என்பதும், "மெய்யியலாளர்கள் உலகை விளக்குவதற்கு மட்டுமே பல வழிகளைக் கையாண்டுள்ளனர் - நோக்கம் அதனை மாற்றுவதே" என்ற வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளன.
மார்க்சின் நெருங்கிய தோழர்கள் பலர் இவரது இறப்பின்போது கலந்துகொண்டு பேசினர். இவர்களுள் வில்ஹெல்ம் லீப்னெக்ட், பிரெடெரிக் ஏங்கெல்ஸ் என்பவர்களும் அடங்குவர். ஏங்கெல்ஸ் பேசும்போது,
- "மார்ச் 14 ஆம் தேதி மூன்று மணிக்கு கால்மணிநேரம் இருந்தபோது வாழ்ந்துகொண்டிருந்த மிகப்பெரிய சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திவிட்டார். இவர் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனிமையில் விடப்பட்டிருந்தார். திரும்பிவந்து பார்த்தபோது அவர் தனது நாற்காலியில் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டதைக் கண்டோம்." என்றார்.
மார்க்சின் கல்லறை 1954 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியப் பொதுவுடமைக் கட்சியால் அமைக்கப்பட்டது. இதில் லாரன்ஸ் பிராட்ஷாவினால் உருவாக்கப்பட்ட மார்க்சின் மார்பளவுச் சிலையும் உள்ளது. மார்க்சின் முன்னைய கல்லறை மிகவும் எளிமையானதாகவே இருந்தது. 1970 ஆம் ஆண்டில் இக் கல்லறையை கையால் செய்த வெடிகுண்டு மூலம் தகர்க்க முயற்சி செய்யப்பட்டது ஆயினும் இது வெற்றியளிக்கவில்லை.
Georg Wilhelm Friedrich Hegel என்பவரின் தர்க்கமுறை மற்றும் வரலாற்று பார்வை அடம் ஸ்மித் மற்றும் டேவிட் ரிக்காடோ என்பவர்களின் தொன்மை அரசியல் பொருளியல் கருத்துக்கள் பிரான்சு தத்துவவியலாளர் ரூசோவின் குடியரசு பற்றிய கருத்துக்கள் என்பனவற்றால் மார்க்ஸ் மிகவும் கவரப்பட்டார்.
[தொகு] மார்க்சின் சிந்தனைகள்
மார்க்சைப்போல மார்சியவாதிகளாலும், எதிர்ப்பாளர்களாலும் ஒன்றுபோலவே பிழையாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள் தற்கால வரலாற்றில் மிகவும் குறைவு என அமெரிக்க மார்க்ஸ் பற்றி ஆய்வு செய்தவரான ஹால் டிராப்பர் ஒருமுறை குறிப்பிட்டார். மார்க்சின் சிந்தனைகளைப் பல்வேறு குழுக்கள் பல்வேறு வகையாக விளக்கியுள்ளன. இவர்களுள், மார்க்சிய-லெனினியவாதிகள், டிரொஸ்கியிசவாதிகள், மாவோயிசவாதிகள், தாராண்மை மார்க்சியவாதிகள் என்போர் அடங்குவர்.
[தொகு] மார்க்ஸ் சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்தியவை
மார்க்சினது சிந்தனைகளில் பல முந்திய, சமகாலச் சிந்தனைகளின் செல்வாக்கு உள்ளது. பின்வருவன அவற்றுள் சில.
- ஹேகலின் முறைகளும், வரலாற்று ஆய்வுப்போக்கும்.
- ஆடம் சிமித், டேவிட் ரிக்காடோ போன்றோரின் செந்நெறி அரசியல் பொருளாதாரம்.
- பிரெஞ்சு சோசலிச மற்றும் சமூகவியல் சிந்தனைகள். குறிப்பாக ஜான் ஜாக் ரூசோ, ஹென்றி டி செயின்ட்-சிமோன், சார்லஸ் ஃபூரியர் போன்றோரின் சிந்தனைகள்.
- முந்திய ஜெர்மானிய மெய்யியல் பொருள்முதல்வாதம், குறிப்பாக லுட்விக் ஃபியுவெர்பக்.
- பிரடெரிக் ஏங்கெல்சின் தொழிலாளர் வர்க்கத்தினருடனான ஒருமைப்பாடு.
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனப்படும் மார்க்சின் வரலாறு பற்றிய நோக்கு ஹேகெலின் சிந்தனைகளின் தாக்கத்தைக் கொண்டது ஆகும். மனித வரலாறு துண்டுதுண்டாக இருந்து முழுமையையும் உண்மையையும் நோக்கிச் செல்லும் இயல்பு கொண்டது என ஹேகல் நம்பினார். இந்த உண்மைநிலை நோக்கிச் செல்லும் வழிமுறை படிமுறையானது என்றும் சில வேளைகளில் இருக்கும் நிலைக்கு எதிராக தொடர்ச்சியற்ற புரட்சிகரமான பாய்ச்சலும், எழுச்சிகளும் தேவை என்று ஹேகல் விளக்கியிருந்தார். எடுத்துக்காட்டாக, ஹேகல் ஐக்கிய அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த அடிமை முறையைத் தீவிரமாக எதிர்த்துவந்ததுடன், கிறிஸ்தவ நாடுகள் இதனை ஒழித்துவிடுவார்கள் என்றும் அவர் எதிர்வுகூறினார்.
[தொகு] மெய்யியல்
மார்க்சின் மெய்யியல் அவரது மனித இயல்பு பற்றிய நோக்கில் தங்கியுள்ளது. அடைப்படையில், மனிதனுடைய இயல்பு இயற்கையை மாற்றுவது என்று மார்க்ஸ் கருதினார் அவ்வாறு இயற்கையை மாற்றும் செயல்முறையை "உழைப்பு" என்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வல்லமையை உழைப்புச் சக்தி என்றும் அவர் அழைத்தார். மார்க்சைப் பொறுத்தவரை இது ஒரே சமயத்தில் உடல் சார்ந்ததும் மனம் சார்ந்ததுமான செயற்பாடு ஆகும்.
- ஒரு சிலந்தி ஒரு நெசவாளியை ஒத்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது, தனது கூட்டைக் கட்டும் தேனீ பல கட்டிடக்கலைஞர்களை வெட்கப்படும்படி செய்கிறது. ஆனால், மிகத்திறமையற்ற கட்டிடக்கலைஞனுக்கும், மிகச் சிறந்த தேனீக்கும் இடையிலுள்ள வேறுபாடு, கட்டிடக்கலைஞன் கட்டிடத்தை உண்மையாகக் கட்டுமுன்னரே கற்பனையில் கட்டிவிடுகிறான் என்பதாகும்."
- (மூலதனம், தொகுதி 1, அத்தியாயம் 7)
[தொகு] மார்க்ஸ்சின் ஆக்கங்கள்
- Introduction to a Critique of Hegel's philosophy of Right- சரியானது பற்றிய ஹெகலின் தத்துவத்தின் திறனாய்விற்கு அறிமுகம்,1843.
- The Poverty of Philosophy - தத்துவத்தின் வறுமை,1847.
- Discourse upon The Question of Free Exchange - சுதந்திரமான நாணயமாற்றுக்கேள்வி பற்றிய சொற்பொழிவு,1848.
- The communist Manifesto - கம்யூனிஸ்ட் அறிக்கை,1848.
- Das kapital- மூலதனம்
- Introduction to the Critique of Political Economy - அரசியல் பொருளாதார திறனாய்விற்கு அறிமுகம்,1859.
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] ஆதாரங்கள்
- வெ.சாமிநாத சர்மா. (). மார்க்ஸ். சென்னை: சந்தியா.
No comments:
Post a Comment